31.8 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

உள்ளூர் இசைக் கலைஞர்களைப் பயன்படுத்துங்கள் -‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன்

பெட்டாலிங் ஜெயா, அக்.06:
மலேசிய இந்துக்கள் அனைவரும் உள்நாட்டு இசைக் கலைஞர்களைப் பயன்படுத்தும்படி, மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆலயங்கள், பொது மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் இல்லங்களில் பொதுவாக நடைபெறும் சுபகாரியங்களுக்கு மேள-நாதஸ்வர இசைக் கலைஞர்களை அமர்த்தும்பொழுது, நம் மலேசியத் திருநாட்டிலேயே நன்றாக பயிற்சிபெற்ற, தேர்ந்த இசைக் கலைஞர்களைக் கருத்தில் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் நாடு உட்பட வெளிநாடுகளில் இருந்துவரும் இசைக் கலைஞர்கள்மீது மலேசிய இந்து சங்கத்திற்கு எந்த முரணும் வருத்தமும் இல்லை; நம் தொப்புள்கொடி உறவுகள் வாழும் தமிழ் நாட்டில் இருந்துதான் இத்தனைக் காலமும் மத்தள, நாதசுவரக் கலைஞர்கள் இங்கு வந்து அனைத்து மங்கள நிகழ்ச்சிகளையும் நல்லவிதமாக நடத்தி வைத்திருக்கின்றனர்.

குறிப்பாக, ஆலயங்களில் இடம்பெறும் வழிபாடு, திருமணம், திருக்குட முழுக்கு விழா போன்ற நிகழ்ச்சிகளை இறைமணம் கமழவும் பக்திமனம் ஓங்கவும் நடத்தி வைத்தவர்கள் வெளிநாட்டு இசைக் கலைஞர்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், அண்மைக் காலமாக வரும் இசைக் கலைஞர்கள் மேளம் இசைக்கவும் நாதசுவரம் வாசிக்கவும் தெரியாதவர்களாக இருக்கின்றனர். போதிய இசை ஞானமும் பயிற்சியும் இல்லாததால், தடுமாறி நிற்கின்றனர்.

இப்படிப்பட்டவர்களை வரவழைத்த ஆலயப் பொறுப்பாளர்கள் மிகவும் சங்கடத்திற்கு ஆளாகின்றனர். பிற நிகழ்ச்சிகளுக்கு குத்தகை அடிப்படையில் செல்லும் இடங்களிலும் தாளம்-ஸ்வரம்-சுதி சேராமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்; தவிர, அப்படியே கடந்து போகவும் சமாளிக்கவும் பார்க்கின்றனர்.

இத்தகையப் போக்கினால், மங்கள நிகழ்ச்சிகளையும் வழிபாட்டு ஏற்பாடுகளையும் செய்பவர்கள் வருத்தத்திற்கும் சங்கடத்திற்கும் ஆளாகி புகார் தெரிவிக்கும்போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த மோசமான நிலைமைக்கு, இடைத்தரகர்களும் முகவர்களும் காரணமாக உள்ளனர்.

அனுபவமும் இசைத்துறையில் போதிய ஞானமும் பட்டறிவும் இல்லாதவர்களை வலைத்து இங்கு அனுப்பி வைக்கின்றனர் என்றால், மலேசியாவில் வாழ்கின்ற இந்து மக்களை, குறிப்பாக ஆலய நிருவாகங்களை அவர்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர் என்றுதான் கருத வேண்டி உள்ளது.

சம்பந்தப்பட்ட முகவர்களும் இடத்தரர்களும் தங்களுக்கான தொகை கிடைத்தால் போதும் என்ற மனப்பான்மையில், கொஞ்சமும் பொறுப்பற்றவர்களாகவும் பண ஆசையால் உந்தப்பட்டவர்களாகவும் நடந்து கொள்வதை அறிய முடிகிறது.

அதனால், நாமும் மாற்றி யோசிக்க வேண்டி உள்ளது.

உள்நாட்டில் ஏராளமான மத்தள-நாதசுவர கலைஞர்கள் உள்ளனர். பெண் கலைஞர்கள்கூட உள்ளனர். அதுவும் நன்றாக பயின்றவர்களாகவும் இசைத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

குறிப்பாக, ‘நாதஸ்வர-தவில் இசை ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி’ அமைப்பின் சார்பில் மலேசியாவில் மிகச்சிறந்த முறையில், நாதஸ்வர-மேள இசைக் கலைஞர்கள் உருவாக்கப்படுகின்றனர். இந்த அமைப்பு, சென்னை இசை சங்கத்துடன் இணைந்து செயல்படுகிறது.

அனைத்து பாலினத்தவருக்கும் இசைக்கலை பயிற்றுவிக்கப்படிகிறது.

அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு, மலேசியாவில் உள்ள இந்துக்களும் ஆலய-அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்க கணேசன் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles