
கோலாலம்பூர், அக்.31:
சகமெங்கும் வாழும் இந்துக்களைப் போல மலேசியாவில் வாழ்கின்ற இந்து மக்களும் பாரம்பரியம் சிதையாமல் சனாதனப் பெருமை மங்காமல் இந்தத் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன், தன்னுடைய தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகை தினத்தில் இந்துக்கள் அனைவரும் சைவ உணவு உண்பதை ஒரு புதிய கலாசாரமாக கடைப்பிடிக்க வேண்டும். காலமெல்லாம் அசைவ உணவை உண்ணும் நாம், இந்தப் பண்டிகைக் காலத்தில் குறிப்பாக தீபாவளி தினத்தில் அவசியம் சைவமாக இருப்பதுடன், மது அருந்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்
திபாவளி தினத்தில் பொழுது விடிந்ததும் எண்ணெய்க் குளியலை கட்டாயம் மேற்கொண்டு, இந்துக்கள் அனைவரும் கங்கை நீராடலுக்கு இணையான ஆன்மிக தாத்பரியத்தைப் பெற வேண்டும். நம் சனாதன தர்மத்தின்படி, இந்த சம்பிரதாயத்தை ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதைப்போல, தீபாவளிக்கு முதல், ஒவ்வொரு குடும்பத்திலும் முன்னோருக்கு படையல் இடுவதை தப்பாமல் செய்ய வேண்டும்.
பல இன மக்களுடனும் பல சமயத்தினருடனும் சேர்ந்து வாழும் நாம், பல்லின கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கும் வகையில் அண்டை அயலாருடன் இணைந்து அவர்களை தங்கள் இல்லத்திற்கு அழைத்து விருந்துபசரிப்புடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது மிகவும் சிறப்பானது.
இந்தத் தீபாவளிப் பண்டிகை இந்துக்கள் அனைவருக்கும் சுபிட்சத்தையும் வளப்பதையும் கொண்டுவர எல்லாம்வல்ல கடவுள் அருள்புரியும்படி அவனடி போற்றுகிறேன் என்று சிவநெறிச் செல்வர் தங்க கணேசன் தன்னுடைய தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
