
வெளியுறவு அமைச்சர் முஹம்மத் ஹசன் ஓர் உணவகத்தில் புகைபிடித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஜுல்கிப்லி அமாட் அளித்த உறுதிமொழியை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்றுள்ளது.
அவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்று பி. ப. சங்கக் கல்வி அதிகாரி சுப்பாராவ் வலியுறுத்தினார்.
அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்த பொது சுகாதாரச் சட்டம் 2024 (சட்டம் 852) க்கான புகைபிடித்தல் தயாரிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்த விரும்புவதாக அதன் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.
புகையிலை தயாரிப்பு கட்டுப்பாடு (திருத்தம்) விதிமுறைகள் 2018 ன் கீழ், புகைபிடிக்கக் கூடாத இடத்தில் புகைபிடிக்கும் எவருக்கும் 10,000 ரிங்கிட் வரை அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும், அதே நேரத்தில் புகைபிடிக்காத அடையாளத்தைக் காட்டத் தவறும் வணிக உரிமையாளர்கள் மவெ 3,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றார் சுப்பாராவ்.
இதற்கிடையில், சட்டம் 852 ன் பிரிவு 16, புகைபிடிக்காத பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் புகைபிடிப்பவர்களுக்கு 5,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறுகிறது.
முக்கிய பிரமுகர்கள் உட்பட எந்த புகைப்பிடிப்பவர்களும் புகைபிடிக்கக் கூடாத பகுதிகளில் புகைபிடிக்கக் கூடாது என்பதற்காக அதிகபட்ச அபராதம் விதிக்குமாறு சுகாதார அமைச்சை பி.ப.சங்கம் வலியுறுத்தியது.
இன்று சிரம்பான் சுகாதார இலாகாவின் அதிகாரி ஒருவர் வெளியுறவு அமைச்சரை சந்தித்து குற்றம் குறித்த நோட்டிஸ் அளித்ததாகக் கூறப்படுகிறது.
உண்மையைச் சொல்வதென்றால், முஹம்மது ஹசன் அவர்களே சுகாதார அமைச்சிடம் தனக்கு அபராதம் விதிக்கும்படி விண்ணப்பம் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றிய அமைச்சர்கள் முதலில் சட்டத்தை பின்பற்ற வேண்டும்.
சுகாதார அமைச்சர் உறுதியளித்தபடி இரட்டை நிலைப்பாடு இல்லாமல் குற்றவாளிகள் மீது மிகவும் உறுதியாக இருக்குமாறு சுகாதார அமைச்சை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக சுப்பாராவ் தெரிவித்தார்.



