
கஜகஸ்தானில், 38 பேர் உயிரிழக்க காரணமான அஜர்பைஜான் விமானம், ரஷ்யாவின் ஏவுகணையால் தவறுதலாக தாக்கப்பட்டு இருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். ஐரோப்பிய நாடான அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து, ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், ‘எம்ப்ரேயர் – 190’ ரக பயணியர் விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில், 62 பயணியர், இரு விமானியர், மூன்று விமான ஊழியர்கள் என, மொத்தம் 67 பேர் இருந்தனர். கஜகஸ்தானின் வான் பரப்பில் பறந்த இந்த விமானம், அந்நாட்டின் அக்டாவ் நகரில் கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்கு உள்ளானது. இதில் விமானம் இரு பாகங்களாக உடைந்தது. இந்த விபத்தில், இரு விமானியர் உட்பட 38 பேர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 29 பயணியர் உயிர் பிழைத்தனர். விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறிய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், விமான போக்குவரத்து நிபுணர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் சர்வதேச செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்து உள்ளனர்.அதில், விமானத்தின் எரிபொருள் பாகத்தில் உள்ள துவாரம் மற்றும் இறக்கையில் உள்ள பாதிப்புகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, ஏவுகணை தாக்கியது போல் உள்ளதாக கூறியுள்ளனர்.
