
செமினி இளைஞர் விளையாட்டு மன்றத்தின் பூப்பந்து மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரின்ச்சிக் செமினி, இ.ஸெட்.ஒய். பூப்பந்து அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக சிலாங்கூர் மாநில பிபிபி தலைவரும் உலு லங்காட் தொகுதித் தலைவருமான டாக்டர் எம்.சுரேந்திரன், தொழிலதிபர் டத்தோ மகேந்திரன் நடராஜன், கேப்டன் எலன், கேப்டன் ஏபி டேனியல், பயிற்றுநர் ஜேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
இந்நிகழ்வில் பேசிய டாக்டர் சுரேந்திரன், இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை இலவசமாக நடத்துவதற்காக இந்த விளையாட்டு மன்றத்திற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இது உண்மையில் ஒரு பெரிய முயற்சியாகத்தான் கருதப்படுகிறது. இதுபோன்ற போட்டிகளில் நம் இந்திய மாணவர்கள் பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதன் மூலமாக மாவட்ட, மாநில, தேசிய ரீதியிலான பூப்பந்து போட்டிகளில் பங்கேற்று சமூகத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
கே.எஸ்.ராமின் இந்த முயற்சிக்கு நான் மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு அதில் நம் இந்திய மாணவர்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த சான்றிதழ் வழங்கும் விழா பள்ளி மாணவர்களுக்காக இப்போதுதான் முதன்முறையாக மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படுகிறது. இது தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று இம்மன்றத்தின் தலைவர், கே.எஸ்.ராம் அவர்கள் தெரிவித்தார்.
கடந்த 1990ஆம் ஆண்டு தொடங்கி பூப்பந்து விளையாட்டில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கானச் சங்கம் பதிவுச் செய்யப்பட்டு 13 ஆண்டுகளாகி விட்டது. இது இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அம்மன்றத்தைச் சேர்ந்த மூத்த விளையாட்டாளர்கள் 15 பேர் இணைந்து இதற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
பள்ளி மாணவர்களும் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு இலவசப் பூப்பந்து விளையாட்டுப் பயிற்சியையும் கடந்த 7 ஆண்டுகளாக இவர்கள் வழங்கி வருகிறார்கள். இப்பயிற்சியில் 8 முதல் 16 வயதிற்குட்பட்ட 45 மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் முக்கிய நோக்கம் நம் இந்திய மாணவர்கள் எந்தவொரு தவறான வழியில் சென்று விடாமல் விளையாட்டுத் துறையில் திறமைசாலிகளாக உருவாக வேண்டும் என்பதாகும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் 45 பேருக்கும் மூத்த விளையாட்டாளர்கள் 20 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.