
மலேசிய அரசியலில் நீண்ட கால அனுபவம் கொண்ட தலைவரான டத்தோஸ்ரீ சரவணன் குறித்து சில ஊடகங்கள் புறக்கணிப்பு மனப்பான்மையை கடைப்பிடித்து வருவது ஏன் என்ற கேள்வி சமூகத்தில் எழுந்துள்ளது.
மறைந்த துன் சாமிவேலு அவர்களிடம் அரசியல் கற்ற டத்தோஸ்ரீ சரவணன், மனிதவள அமைச்சராகவும் விளையாட்டுத் துறை துணையமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அந்த காலகட்டத்தில் அவரின் செயல்பாடுகள் ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போது பதவியில் இல்லாத நிலையில் சில ஊடகங்கள் அவரை புறக்கணித்து வருவது வருத்தமளிப்பதாகக் கூறப்படுகிறது. “ஒரு தலைவரின் பணியை பதவியால் மட்டுமே மதிப்பிடக் கூடாது” என்பதே பலரின் கருத்தாகும்.
டத்தோஸ்ரீ சரவணன், அரசியல் துறையைத் தாண்டியும் தமிழ் மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காக தொடர்ந்து சேவை செய்து வருகிறார். கண்ணதாசன் விழா, பட்டிமன்றங்கள், புத்தக வெளியீடுகள் போன்ற நிகழ்வுகள் மூலம் மலேசியாவில் தமிழ் வளர்ச்சிக்கு அவர் பெரும் பங்களிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், பத்திரிகையாளர்களை மதித்து அவர்களுக்கு தேவையான நேரங்களில் உதவி செய்து வரும் தலைவராகவும் அவர் அறியப்படுகிறார். எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டால், பாகுபாடு பாராமல் முதலில் உதவிக்கு வரும் நபராக டத்தோஸ்ரீ சரவணன் இருப்பதாக பலர் பாராட்டுகின்றனர்.
இந்நிலையில், அரசியல் பதவியை அடிப்படையாகக் கொண்டு தலைவர்களை புறக்கணிக்கும் நடைமுறை குறித்து சமூகத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஒரு தலைவரின் சேவைகள் மற்றும் பங்களிப்புகள் தொடர்ந்தும் மதிப்பிடப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
