
செந்தோசாவில் நடைபெறவுள்ள ஒற்றுமை சித்திரை பண்பாட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த விழா, வரும் மே 10ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, செந்தோசா தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது. பல்வேறு அரசு சாரா அமைப்புகள், ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், இந்திய பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டாடவும் இந்த விழா நடத்தப்படுகிறது. பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், இளைஞர்களுக்கு அதன் மதிப்பை உணர்த்தும் முயற்சியாகவும் இது அமைகிறது.
இந்த விழாவில் பாரம்பரிய நடனம், இசை நிகழ்ச்சிகள், இந்திய பாரம்பரிய விளையாட்டுகள், கண்காட்சிகள், குடும்ப செயல்பாடுகள், உணவுக் கடைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
மேலும், பொதுமக்கள் நலனுக்காக இரத்த தான முகாம், சுகாதார பரிசோதனை போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன. விழாவை மேலும் சிறப்பிக்க மோட்டார் சைக்கிள், கைப்பேசி உள்ளிட்ட பரிசுகளுடன் அதிர்ஷ்டக் குலுக்கலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“பண்பாட்டின் மூலம் அனைவரையும் ஒரே சமூகமாக இணைக்க முடியும்” என குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.



