
உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சுற்றி பரவிய 464 தவறான மற்றும் போலியான உள்ளடக்கங்கள் கடந்த மார்ச் 29 முதல் ஏப்ரல் 30 வரை அடையாளம் காணப்பட்டதாக தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
அவற்றில் 312 உள்ளடக்கங்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதுடன், 65 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அவற்றில் 15 வழக்குகள் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மற்றவை தொடர்ந்து விசாரணையில் உள்ளன.
ஹவானா 2026 ஊடக மன்ற ஆய்வரங்கில் உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலித் தகவல்கள் மற்றும் தவறான செய்திகளின் வேகமான பரவல், பொதுமக்களின் நம்பிக்கைக்கு பெரிய சவாலாக மாறியுள்ளதாக எச்சரித்தார்.
மேலும்,
👉 போலி சமூக ஊடக கணக்குகள்
👉 பிரபலங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்தல்
👉 மோசடி தகவல் பரப்பல்
போன்ற சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற 98,503 மோசடி மற்றும் தவறான உள்ளடக்கங்கள் பதிவாகியிருந்தன. அதேவேளையில், இந்த ஆண்டு ஏப்ரல் 30 வரை 60,829 உள்ளடக்கங்கள் சமூக ஊடக தளங்களால் அகற்றப்பட்டுள்ளன என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.



