
மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) கட்சியின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா மக்களை சென்றடையவில்லை என்றால் அது கட்சிக்கே மிகப்பெரிய இழப்பாக அமையும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மஇகா தொடங்கப்பட்டு தற்போது 80 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை மிகவும் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
குறிப்பாக, ஒன்பது முக்கிய திட்டங்களின் மூலம் நாடு முழுவதும் இந்த 80ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“மஇகா முதன்முதலில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தான் தொடங்கப்பட்டது. அதனால், வரும் மே 21ஆம் தேதி அந்த ஆலயத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது,” என்று அவர் கூறினார்.
இதனுடன், நாடு முழுவதும் பல்வேறு மத வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“மஇகாவில் இந்து, கிறிஸ்துவர் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளனர். அதனால் அனைத்து மதங்களின் வழியிலும் பிரார்த்தனைகள் நடத்தப்படும்,” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், மஇகா உறுப்பினர்களுக்கான குடும்ப தின விழாக்கள், மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள் மற்றும் புற்றுநோய் பரிசோதனைகள் போன்ற சமூக நல நிகழ்ச்சிகளும் நாடு முழுவதும் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
இதனுடன், கால்பந்து, கபடி, பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள், கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, பேச்சுப் போட்டிகள் மற்றும் மக்களுடனான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளதுடன், இறுதிக்கட்டமாக மாபெரும் ஓட்டப்பந்தயமும் நடத்தப்படும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்தார்.



