
ஆப்பிரிக்க நாடுகளில் இபோலா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில், மலேசிய சுகாதார அமைச்சு தனது கண்காணிப்பு மற்றும் ஆயத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் தற்போது இபோலா கிருமித்தொற்று பரவி வருவதாகவும், இதனை உலக சுகாதார நிறுவனம் (WHO) அனைத்துலக பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இதுவரை இபோலா பாதிப்பு எந்தவிதமாகவும் பதிவாகவில்லை என்றாலும், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அமைச்சு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
“எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார்நிலையை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,” என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உகாண்டா மற்றும் காங்கோ நாடுகளிலிருந்து மலேசியா வரும் பயணிகள் சிறப்பு கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், துபாய், டோஹா உள்ளிட்ட அனைத்துலக விமான நிலையங்கள் வழியாக மாற்று விமானங்களில் மலேசியா வரும் பயணிகளும் இந்த கண்காணிப்பில் அடங்குவார்கள் என்று அமைச்சு விளக்கியுள்ளது.
இபோலா தொடர்பான உலகளாவிய நிலைமையை அமைச்சு தொடர்ந்து கவனித்து வருவதாகவும், பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



