
“அன்னை மாரியம்மன் தாலாட்டில் பிறந்த மஇகாவை எந்தவொரு தீய சக்தியாலும் அழிக்க முடியாது. மறுமலர்ச்சியுடன் தேசிய அரசியலில் மஇகா மீண்டும் பயணிக்கும்,” என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று கூட்டுப் பிரார்த்தனையுடன் தொடங்கிய நிலையில், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.
“80 ஆண்டுகளுக்கு முன்பு மஇகா தொடங்கப்பட்டதும் இதே ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில்தான். இன்று அதே ஆலயத்தில் 80ஆம் ஆண்டு விழாவை தொடங்குவது வரலாற்று சிறப்பு மிக்க தருணமாகும்,” என்றார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள 158 ஆலயங்களில் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றதாகவும், கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மலேசிய இந்தியர்களின் நலனும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மஇகா உருவாக்கப்பட்டது என்றும், கட்சியின் மூத்த தலைவர்கள் அதனை அடிப்படையாகக் கொண்டு சேவை செய்ததாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
“ஒரு காலக்கட்டத்தில் மஇகா அரசியல் பின்னடைவை சந்தித்தது. இந்திய சமுதாயம் கட்சிக்கு பாடம் கற்றுக்கொடுத்தது. பின்னர் சில தலைவர்களும் சமுதாயத்திற்கு பாடம் கற்றுக்கொடுத்தனர். இன்று மக்கள் உண்மையை உணர ஆரம்பித்துள்ளனர்,” என்றார்.
பதவி, பட்டம் இல்லாவிட்டாலும் இந்திய சமூகத்திற்காக மஇகா தொடர்ந்து உழைத்து வருவதாகவும், இதனால் மக்களின் ஆதரவு மீண்டும் கட்சிக்குத் திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“மாரியம்மன் அருளால் உருவான மஇகாவை எந்த தீய சக்தியாலும் அழிக்க முடியாது,” என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதியாகக் கூறினார். – Namikkai.com.my



