
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலையைத் தணிக்கும் நோக்கில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தற்போது சாதகமான முன்னேற்றப் பாதையில் உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய தலைவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கட்டமைப்பு ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
“இந்த முன்னேற்றங்களை நான் உண்மையான நம்பிக்கையுடன் பார்க்கிறேன்,” என்று பிரதமர் தெரிவித்தார்.
மேலும், இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளில் பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், ஓமான், பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஆற்றிய ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை மலேசியா பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டு வருவதை மலேசியா வரவேற்கிறது என்றும் அன்வார் கூறினார்.
“தற்போதைய போர்நிறுத்தத்தை வலுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கடல் போக்குவரத்தை உறுதிசெய்து, பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொள்ளும் ஒரு விரிவான ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை உருவாக்கும் எந்த முயற்சிக்கும் மலேசியா முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.



