27.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

“பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கு முகாம் மாற்றிய ஈரான்!” – ஃபிஃபா உறுதி

🔥 Views : 2,480
👁 Reading Now : 27

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக, 2026 உலகக் கோப்பைக்கான தனது பயிற்சி முகாமை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கு ஈரான் மாற்றியுள்ளதாக ஃபிஃபா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

முதலில், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள டுசானில் அமைந்த விளையாட்டு வளாகத்தை உலகக் கோப்பை காலத்தில் தேசிய அணியின் தற்காலிக தலைமையகமாக ஈரான் தேர்வு செய்திருந்தது.

ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களால் ஈரான் தனது முகாமை மாற்ற கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, உலகக் கோப்பை அணிகளின் இறுதி முகாம் பட்டியலை நேற்று வெளியிட்ட ஃபிஃபா, ஈரான் தற்போது மெக்சிகோவின் டிஜுவானாவில் உள்ள Centro Xoloitzcuintle மையத்தை தனது பயிற்சி தளமாகத் தேர்வு செய்துள்ளதாக அறிவித்தது.

இருப்பினும், ஈரானின் குழுநிலைப் போட்டிகளின் இடங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

Group G-யில் இடம்பெற்றுள்ள ஈரான், ஜூன் 15ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்த்து மற்றும் ஜூன் 21ஆம் தேதி பெல்ஜியத்தை எதிர்த்து லாஸ் ஏஞ்சல்ஸில் விளையாடவுள்ளது. ஜூன் 26ஆம் தேதி எகிப்துக்கு எதிரான போட்டி சியாட்டிலில் நடைபெறும்.

ஈரான் கால்பந்து சம்மேளனத் தலைவர் மெஹ்தி தாஜ் கூறுகையில், டிஜுவானா நகரம் அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக்கு அருகில் இருப்பதால், அமெரிக்காவிற்குள் நுழைய வேண்டிய விசா சிக்கல்களை எளிதாக்கும் என்றார்.

“ஃபிஃபா மற்றும் உலகக் கோப்பை அதிகாரிகளுடன் இஸ்தான்புலில் நடைபெற்ற சந்திப்புகளும், டெஹ்ரானில் நடைபெற்ற இணையவழி ஆலோசனைகளும் வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கு அணியின் முகாமை மாற்றும் எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ஈரான் வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இதுவரை அமெரிக்க விசா வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்தும் 2026 உலகக் கோப்பை போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles