
பூடி டீசல் (BUDI Diesel) திட்டத்தின் கீழ் இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர்கள் தகுதி பெற்றுள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஜூன் 27 முதல் தொடங்கப்பட்ட முன்கூட்டிய அணுகல் (Early Access) காலப்பகுதியில் 80,000-க்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தியிருப்பது, இலக்கு அடிப்படையிலான டீசல் மானியத் திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை காட்டுகிறது என்றார்.
இன்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்ட பூடி டீசல் கண்காணிப்பு நடவடிக்கை, முழுமையான அமலாக்கத்தின் முதல் நாளிலேயே திட்டம் சீராக செயல்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தீபகற்ப மலேசியாவில் ஜூன் 27 முதல் முன்கூட்டிய அணுகல் தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை எந்தவித பெரிய சிக்கல்களும் இல்லாமல் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
“முன்கூட்டிய அணுகல் காலத்தில் 80,000-க்கும் மேற்பட்டோர் பூடி டீசல் திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளனர். திட்டத்தின் செயல்பாடு இதுவரை மிகவும் சீராக உள்ளது,” என்று அமீர் ஹம்சா தெரிவித்தார்.



