26.4 C
Kuala Lumpur
Friday, July 3, 2026

Vetri

🗳️ ஜொகூர் தேர்தலில் இந்தியர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் – டாக்டர் குணராஜ் அழைப்பு!

🔥 Views : 2,840
👁 Reading Now : 60

ஜொகூர் மாநிலத் தேர்தலில் அரசியல் நிலைத்தன்மை, மடானி சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர வேண்டுமெனில், இந்தியச் சமூகம் நம்பிக்கை கூட்டணிக்கு (Pakatan Harapan) ஆதரவளிக்க வேண்டும் என்று பிகேஆர் மத்திய தலைமைத்துவக் குழு உறுப்பினரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறுகையில், ஜொகூரில் இந்தியர்கள் சிறுபான்மை சமூகமாக இருந்தாலும், கலப்பு மற்றும் கடுமையான போட்டி நிலவும் சுமார் 25 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி அவர்களிடம் இருப்பதாக தெரிவித்தார்.

“இந்தத் தேர்தல் ஒரு சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல. அரசியல் நிலைத்தன்மை, சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சியைத் தொடர்வதா அல்லது நாட்டை மீண்டும் அரசியல் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளுவதா என்பதை தீர்மானிக்கும் தேர்தலாகும்,” என்றார்.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலை, புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மக்களின் நலனில் கவனம் செலுத்தும் நிலையான அரசாங்கம் மலேசியாவிற்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மடானி அரசாங்கம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் அனைத்து இன மக்களுக்கும் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான (MITRA) மானிய ஒதுக்கீடு பல ஆண்டுகளுக்குப் பிறகு RM100 மில்லியனிலிருந்து RM150 மில்லியனாக உயர்த்தப்பட்டதையும், எதிர்காலத்தில் அதனை மேலும் அதிகரிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்திருப்பதையும் அவர் வரவேற்றார்.

மேலும், தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீடு அதிகரித்தல், ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கான பராமரிப்பு உதவிகள், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) திட்டங்கள், குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களுக்கான உதவிகள், STR மற்றும் SARA நிதியுதவிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவு ஆகியவை மடானி அரசாங்கத்தின் முக்கிய சாதனைகள் என்றும் அவர் கூறினார்.

“வாக்காளர்கள் அரசாங்கத்தை அதன் செயல்திறன் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். நாட்டின் எதிர்கால நலனுக்காக இந்தியச் சமூகம் சரியான முடிவை எடுத்து, மடானி அரசாங்கத்திற்கு மீண்டும் ஆதரவு வழங்கும் என நான் நம்புகிறேன்,” என்று டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles