
2018ஆம் ஆண்டு முதல் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க முன்னாள் பிரதமர்களுக்கு தானாகவே அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் அனுப்பும் நடைமுறை இல்லை என தகவல் தொடர்பு அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்ஸா விளக்கமளித்துள்ளார்.
தேசிய தினம் மற்றும் மலேசியா தினம் 2026 கொண்டாட்டப் பணிக்குழுவின் தலைவராகவும் உள்ள அவர், டத்தாரான் புத்ராஜயாவில் நடைபெற்ற 2026 தேசிய தினக் கொண்டாட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கலந்துகொண்டது தொடர்பாக எழுந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இதனைத் தெரிவித்தார்.
கூட்டரசு அரசாங்கத்தின் முக்கிய அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களை நிர்வகிக்கும் பிரதமர் துறையின் விழாக்கள் மற்றும் சர்வதேச மாநாட்டுச் செயலகப் பிரிவு வழங்கிய உறுதிப்படுத்தலின் அடிப்படையில், தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான அழைப்பிதழ்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப நிர்வகிக்கப்படுவதாக அவர் கூறினார்.
2018ஆம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர்களுக்கு தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான அழைப்பிதழ்கள் தானாக அனுப்பப்படுவதில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், எந்தவொரு முன்னாள் தலைவரும் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் தேவைப்படும் பட்சத்தில், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட தரப்பினர் விண்ணப்பிப்பதன் மூலம் அதனை நிர்வகிக்க முடியும் என்றும் டத்தோ அப்துல் ஹலிம் தனது அறிக்கையில் விளக்கினார்.



