
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, உதவும் கரங்கள் இயக்கத்தின் தலைவர் முரளி ஆறுமுகம் தலைமையிலும் ஏற்பாட்டிலும் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவின் ஒரு பகுதியாக சுமார் 100 குழந்தைகளுக்கு உணவு, அன்பளிப்புப் பரிசுகள் மற்றும் தேசியக் கொடிகளை முரளி ஆறுமுகம் வழங்கி மகிழ்வித்தார்.
சுதந்திர தினத்தின் உண்மையான சிறப்பு மக்களிடையே நிலவும் சகோதரத்துவத்திலும் ஒற்றுமையிலும் இருப்பதாகக் கூறிய அவர், இனம், மதம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும், உதவும் கரங்கள் இயக்கம் கடந்த பல ஆண்டுகளாக ஆதரவற்றவர்கள், ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாக முரளி தெரிவித்தார்.

சமூகத்திற்கு உதவ விரும்பும் நல்லுள்ளம் கொண்டவர்கள் தங்களது இயக்கத்துடன் இணைந்து ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
“நல்லுள்ளம் கொண்டவர்கள் எங்கள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்கினால், அதன் மூலம் மேலும் பல ஏழை குடும்பங்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்ய முடியும்,” என்று முரளி ஆறுமுகம் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தை வெறும் கொண்டாட்டமாக மட்டுமின்றி, பகிர்வு, மனிதநேயம் மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் நாளாகவும் முன்னெடுத்த இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



