26.4 C
Kuala Lumpur
Wednesday, September 16, 2026

Vetri

கஷ்டங்களை கடந்து இசைத்துறையில் சாதனை; மலேசிய பாடகர் டாக்டர் ராஜீவ் குமாருக்கு குவியும் பாராட்டுகள்!

🔥 Views : 4,945
👁 Reading Now : 30

செய்தி / படங்கள் : எம்.முருகன்
தனது இசை ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் மூலதனமாகக் கொண்டு பல்வேறு சவால்களைக் கடந்து இசைத்துறையில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வரும் மலேசிய பாடகர் டாக்டர் ராஜீவ் குமார், மலேசியா மட்டுமின்றி தமிழகத்திலும் தனது குரல் வளத்தால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.

இசையின் மீது கொண்டிருந்த ஆர்வத்தால் ஆரம்ப காலத்தில் பல சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், முறையாக சங்கீதம் கற்று மேடை நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கிய ராஜீவ் குமார், பின்னர் திரைப்படப் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்திய அவர், சொந்தமாக இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நிறுவனத்தையும் உருவாக்கி அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். அவரது ஒருங்கிணைப்பில் கோலாலம்பூர், சிரம்பான் உள்ளிட்ட பல இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, தனது நிறுவனம் மூலம் மலேசியாவைச் சேர்ந்த பல கலைஞர்களுக்கு மேடை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதும் அவரது இசைப் பயணத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸின் பாடல்களை அவரது குரல் பாணியை நினைவூட்டும் வகையில் பாடும் திறமையால் ராஜீவ் குமார் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளார். அதேவேளை பல்வேறு பாடகர்களின் பாடல்களையும் தனது குரல் வளத்துடன் மேடைகளில் பாடி வருகிறார்.

அண்மையில் மணிவாசகம் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘உறவுகளின் பயணம்’ நிகழ்ச்சிக்காக சென்னை சென்றிருந்த அவர், அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தனது பாடல் திறமையை வெளிப்படுத்தினார்.

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை சந்தித்தபோது, அவருக்கு முன்னிலையில் ‘என்னை விட்டால் யாருமில்லை’ பாடலை யேசுதாஸ் குரல் பாணியில் பாடியதாகவும், அவரது குரல் வளத்தை அமைச்சர் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘பொன்னந்தி மாலைப்பொழுது’ இசை நிகழ்ச்சியிலும் தமிழக கலைஞர்களுடன் இணைந்து பல பாடல்களைப் பாடி பாராட்டைப் பெற்றார்.

இசைத்துறையில் அவர் மேற்கொண்டு வரும் பயணம் மற்றும் சேவைகளைப் பாராட்டி டெல்லியில் இசைத்துறை சார்ந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுநேர பாடகராகத் தொடர்ந்து பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் டாக்டர் ராஜீவ் குமார், தனது சொந்த முயற்சி, கடின உழைப்பு மற்றும் இசை மீதான ஆர்வத்தின் மூலம் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

“ஒரு கலைஞர் எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும் விடாமுயற்சியுடன் தனது திறமையை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும்” என்பதற்கு ராஜீவ் குமாரின் இசைப் பயணம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் மலேசிய ரசிகர்களும் கலைஞர்களும் கூறுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles