
கைது செய்யப்பட்ட போதும் சிறையில் இருந்த போதும் கடுமையாகத் தாக்கப்பட்டதால் காவல் கைதி முகமட் இக்பால் மரணம் அடைந்திருப்பதாக இரண்டு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருப்பதால் இவரின் மரணம் தொடர்பில் முழுமையான சவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் கேட்டுக்கொண்டுள்ளார்
முகமட் இக்பால் அப்துல்லா என்ற காவல் கைதி நேற்று மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கொலை குற்றச்சாட்டு மற்றும் 2 சிறிய குற்றங்களுக்காக கடந்த 28- 9 -2020 ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டார்.
சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட இவர் வயிற்று வலி சிகிச்சைக்காக தஞ்சோங் காராங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இருப்பினும் 29 வயதான முகமட் இக்பால் அப்துல்லா நேற்று காலையில் மரணமுற்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிப்பதாக வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்தார்.
திருமணமான இவருக்கு நூர் ஸம்சியா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இதனிடையே இவரின் மரணம் தொடர்பில் முழுமையான சவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட போது போலீஸ் அதிகாரியால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் சிறையில் இருந்தபோது சிறை வார்டனால் தாக்கப்பட்டு இருப்பதாகவும் புகார்கள் கிடைத்துள்ளது.
ஆகவே இவரின் உண்மையான மனதிற்கு காரணத்தை கண்டறிய சவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
நாட்டில் கடந்த 2 மாதங்களில் ஐந்து காவல் கைதிகள் மரணம் அடைந்துள்ளார்.
கணபதி, சிவபாலன், சுரேந்திரன் மற்றும் ஹேமநாதன் ஆகிய காவல் கைதிகள் மரணமடைந்துள்ளனர்.
இப்போது இந்த வரிசையில் முகமட் இக்பால் அப்துல்லாவும் இடம்பெற்றுள்ளார்.
காவல் கைதிகள் மரணமடையும் சம்பவம் ஒரு தொடர்கதையாக இருக்கிறது என்று வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் குறிப்பிட்டார்.



