
ஜனநாயகப் படுகொலையின் ஒட்டுமொத்த கூடாரமா
தேசியக் கூட்டணி அரசாங்கம்?
ஏஎஸ்டி செய்தித் தளத்தின் அரசியல் கண்ணோட்டம்
26-ஆம் நாளுக்கும் இந்த பூமிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பெரும்பாலான இயற்கைப் பேரிடர்கள் 26-ஆம் நாளில்தான் இடம்பெற்றுள்ளன என்பதை அறிவியல் உலகம் வியந்து நோக்குகிறது.
குறிப்பாக ஜூலை 26-ஆம் நாளைப் பொறுத்தவரை உலக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் உண்டு. போர்முனையில் நின்று உலகையே ஆட்டிப் படைத்த வின்ஸ்டன் சர்ச்சில் 2-ஆம் உலகப் போருக்குப் பின் தேர்தல் களம் கண்டு தொழில் கட்சி சார்பில் பிரிட்டிஷ் பிரதமர் ஆனது ஜூலை 26-இல்; ஆண்டு 1945.

50-க்கும் அதிகமான மாநிலங்களைக் கொண்ட அமெரிக்காவில் நியூயோர்க் அமெரிக்காவுடன் இணைந்தது ஜூலை 26-இல்தான்; ஆண்டு 1788.
பிரிட்டீஷ் இந்தியாவில் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக தாதா பாய் நௌரோஜி நியமிக்கப்பட்ட நாள் ஜூலை 26; 1892.
இப்படி எண்ணற்ற வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட ஜூலை 26-ஆம் நாளான, நாளை திங்கட்கிழமை மலேசிய நாடாளுமன்றம் கூடுகிறது.
ஆனாலும் தேசியக் கூட்டணி அரசாங்கம் தொடை நடுங்கியபடிதான் இந்தக் கட்டத்தைக் எட்டுகிறது. காரணம், கொல்லைப்புறமாக ஆட்சியைக் கைப்பற்றிய இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணிக்கு நாடாளுமன்றம் என்ற சொல்லைக் கேட்டாலே ஒவ்வாமையும் பயமும் பற்றிக் கொள்கின்றன.
ஆகஸ்ட் முதல் நாளுக்குப் பின்னும் அவசரகாலச் சட்டத்தை நீட்டிக்க வேண்டுமென்றால் அதற்குமுன் இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று மலாய் ஆட்சியாளர் மன்றம் அறிவுறுத்திய நிலையில், மாட்சிமைக்குரிய மாமன்னரும் நாடாளுமன்றம் உடனே கூட்டப்பட வேண்டுமென்று இரு முறை வலியுறுத்திய பின்னர், இதேக் கருத்தை நம்பிக்கைக் கூட்டணியும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் பலமுறை கேட்டுக் கொண்டதை அடுத்து, கூடவே ஜனநாயக நடைமுறையில் நாட்டம் கொண்ட கல்வியாளர்களும் ஜனநாயக செயல்பாட்டாளர்களும் பல வேளைகளில் வலியுறுத்தியதை அடுத்து, நாடாளுமன்றத்தைக் கூட்ட இன்றைய தேசியக் கூட்டணி அரசு இம்மாத தொடக்கத்தில் அரை மனதுடன் ஒப்புக் கொண்டது.

அடுத்த நாளே, தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் பெரிய நாட்டாண்மையான பெர்சத்துக் கட்சியின் இளைஞர் அணி, ஜூலை 26-இல் நாடாளுமன்றம் கூடும்பொழுது நம்பிக்கைக் கோரும் தீர்மானம் கொண்டுவரும் கீழறுப்பு வேலையை யாரும் மேற்கொள்ளக்கூடாதென்று அறிக்கை விட்டது.
என்ன ஓர் இறுமாப்பு?
கடந்த ஆண்டு மார்ச் முதல் நாளில் பதவியெற்ற இந்த நம்பிக்கைக் கூட்டணி அரசு, நாடாளுமன்றத்தில் தனக்கான பெரும்பான்மையை நிரூபித்து மக்களிடம் ஆதரவு பெற வேண்டும் என்ற ஜனநாயகப் பண்பு கொஞ்சம்கூட இல்லாமல் கொரோனாவைக் காரணம் காட்டியே போக்கு காட்டி வருகிறது.
அதனால்தான், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கேட்பது, கீழறுப்பு வேலையாகத் தெரிகிறது இந்தக் கட்சிக்கு.
காரணம், இந்தக் கட்சி கடந்து வந்த பாதை அப்படி.

நாட்டு மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்பி, நம்பிக்கையுடன் வாக்களித்து உருவாக்கிய நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கிய இதே பெர்சத்துக் கட்சி, டத்தோஸ்ரீ அன்வாருக்கான வாய்ப்பு வந்த வேளையில் கூட்டணியில் இருந்து விலகி கீழறுப்பு செய்ததுடன் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் அணி சேர்ந்து புதிய கூட்டணியை அமைத்து இன்றுவரை தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்காமலேயே ஆட்சிக் கட்டிலில் ஒட்டிக் கொண்டுள்ளது.
அதுவும், நாளையக் கூட்டத்தில் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் ஒரு சமயத்தில் கலந்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளது. இந்த நடைமுறைக்கு அரசியல் சாசனத்தில் இடம் உள்ளதா? அல்லது நாடாளுமன்ற நடைமுறையில்தான் வழி உள்ளதா?
முடிந்தவரை அதிகாரத்தில் நீடிப்பது, அப்படியும் நெருக்கடி நேர்ந்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி பரிந்துரை செய்வது என்ற தந்திர நோக்கில் பயணிக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசு நாளை கூட்டும் நாடாளுமன்றக் கூட்டமும் அந்த இலக்கை நோக்கித்தான் பயணிக்கும் என்று ஏஎஸ்டி செய்தி நிறுவனம் அவதானிக்கிறது.

