
மருத்துவக் கல்வி மாணவியான புஷ்ப காதெனி திருவேங்கடம் சிறு வயதில் இருந்தே நடனக் கலையில் ஆர்வம் கொண்டிருந்ததால் பரதநாட்டியம் கற்று 2016 ஆகஸ்ட் மாதத்தில் அரங்கேற்றத்தை நிறைவேற்றினார்.
கல்விப் பயணத்திலும் கலை உலகிலும் தொடர்ந்து நாட்டம் செலுத்திவந்த காதெனி, தற்பொழுது மருத்துவக் கல்வியை முடிக்கும் தறுவாயில் இருக்கிறார். இருந்தபோதும், இடைக்காலத்தில் கொரோனா தாக்கத்தின் விளைவாக அதிக காலம் வீட்டிலேயே முடங்கி இருந்ததால், அந்தச் சூழலை தன்னுடைய கலை மேம்பாட்டிற்காக பயன்படுத்திக் கொண்டு கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார்.
ஜதிக்கேற்ற நடனத்தில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் புஷ்ப கெதெனி.
பொதுவாக பரத நாட்டியத்தில் பாவம், தாளம், ராகம் ஆகிய மூன்று கூறுகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், ஜதியில் தாளம் மட்டுமே இருக்கும்.
இந்த ஜதியில் வெளிப்படும் தாளத்திற்கேற்ப கால்களையும் கைகளையும் பயன்படுத்தி அபிநயம் செய்யும் கலையைத்தான் ஜதி நடனம் என்பார்கள்.
இந்த ஜதி நடனம் தொடர்பில் 2021 ஏப்ரல் 18-ஆம் நாளில் நடைபெற்ற பன்னாட்டுப் போட்டியில்தான் சிறப்பாக நடனமாடி ஆசிய சாதனைப் புத்தகத்திலும் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் காதெனி இடம்பிடித்துள்ளார்.
பல்வேறு வயதைச் சேர்ந்த 140 நடனக் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டனர். மலேசியாவைச் சேர்ந்த ரிஷ்மா துரைசாமி, அபிராமி சேகரன் ஆகியோருடன் சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் ஜதி நடனம் ஆடி சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார் காதெனி.
இயங்கலைவழி நடைபெற்ற போட்டிக்கு முன், மதுரை ஆர். முரளிதரன் மூலம் அதே இயங்கலை வழி பயிற்சி பெற்றதாகவும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற முரளிதரன் நட்டுவத் திலகம், சிறந்த நடனக் கலைஞர், கவிஞர், இசை அமைப்பாளர் என்னும் சிறப்புக்கெல்லாம் உரியவர்.
அவர் அளித்த பயிற்சிதான் தன்னுடைய கின்னஸ் சாதனைக்கு அடித்தளம் அமைத்தது என்கிறார் கிளானா ஜெயாவைச் சேர்ந்த புஷ்ப காதெனி திருவேங்கடம்.
