
பினாங்கின் தென் செபராங் பிறை மாவட்டத்தில் நிலவிவரும் பல்லாண்டு கால பிரச்சனைக்கு உரிய தீர்வு காண அரசாங்கத்திடம் 70 மில்லியன் கோரப்படுமென சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள துணையமைச்சர் டத்தோ டாக்டர் மன்சோர் பின் ஒஸ்மான் கூறினார்.
விரைவில் இந்த விவகாரம் அமைச்சுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கீகாரம் பெறப்படும் என்றார்.
இவ்வட்டாரத்திலுள்ள கம்போங் ஜாவி,கம்போங் சேது மற்றும் சுங்கை டூரி ஆகியவை அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாகும்.
இந்த வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமானால் இந்த மூன்று பகுதிகளிலும் முறையான வெள்ளத்தடுப்பு,நீர் உந்தி போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
அப்போதுதான் இப்பகுதி வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு கண்டு,பாதிக்கப்படும் மக்களின் துயரை தீர்க்க முடியுமென நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
தமது சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சின் கீழ் இப்பிரச்சனைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்படுமென அவர் உறுதியளித்தார்.
நேற்று இப்பகுதிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.



