
மலேசிய கல்வித்துறையில் தங்களின் அனுபவங்கள் தொடர்பாக செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 10-ஆம் தேதி வரை 2441 பேர்களிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவததோடு இடைநிலைப்பள்ளி மற்றும் உயர்க்கல்வி கழக கல்விமுறையை கேள்வியெழுப்பும் வகையில் அமைந்துள்ளதாக பாலிங் சமூக சேவகர் செகு இராமசாமி கூறினார். மலேசிய கல்வித்துறை மற்றும் கல்விபாகுபாடு குறித்து இந்தியர்களிடையே நீண்ட நாள் குமுறல்கள் இருந்து வருகின்றன. மலேசிய இந்தியர்கள் சிறுபான்மை இனத்தவர் என்ற முறையில் பள்ளிகளில் தங்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக 10 இந்தியர்களில் 9 பேர் குறிப்பிட்டுள்ளது கல்வி நடைமுறைமீது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் இந்தியர்களின் நிறம் காரணமாக புறக்கணிக்கப்பட்டதாக 69 பேரும் , தங்களது சமய வேறுபாடு காரணமாக புறக்கணிக்கப்பட்டதாக 65% ஆய்வு பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளது புதிய பிரதமர் அறிவித்துள்ள “மலேசிய குடும்பம்” என்ற சுலோகத்திற்கு முற்றிலும் எதிராக உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த ஆய்வில், இந்தியர்களைச் சிறும்பான்மையினர் என்று காரணம் காட்டி கல்வித்துறையில் தங்களது வாய்ப்புகள் பறிக்கப்பட்டதாக 40% பங்கேட்பாளர்கள் தெரிவித்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், பறிபோகும் கல்வித்துறை வாய்ப்பு தொடர்பாக பல்வேறு புகார்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று 92 % பங்கேற்பாளர்கள் கூறியுள்ளதை நமது மலேசிய கல்வியமைச்சு ஆராய வேண்டுமென செகு இராமசாமி வலியுறுத்தினார். இனிவரும் காலங்களில் மலேசிய கல்வித்துறையில் நிகழும் குறைபாடுகளையும் இந்திய சமூகத்தினர் மீது காட்டப்படும் கல்வி பாகுபாட்டினை உடனடி நிவர்த்திகான வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.