
இவ்வாண்டுக்கான எஸ்பிஎம் தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்தை எடுப்பதற்கு,தென் செபராங் பிறையிலுள்ள ஜாவி தேசிய இடைநிலைப்பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்து வருவதால், இப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களின் பெற்றோர் மன வேதனை அடைந்துள்ளனர்.
இன்னும் சில மாதங்களில் 2021 -ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் எஸ்பிஎம் தேர்வில் தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுப்பதற்கு பள்ளியின் முதல்வர் அனுமதி வழங்க மறுத்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் சம்பந்தமாக கடந்த வாரம்,10 இந்திய மாணவர்களின் பெற்றோர் பள்ளியின் முதல்வரை பள்ளியில் சென்று கண்டு பேசியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த பள்ளி முதல்வர் மாணவர்ளுக்கு இலக்கியப் பாடம் வேண்டுமென்றால் நீங்களே தமிழ் ஆசிரியரை ஏற்படு செய்து கொண்டு வரவேண்டும் எனவும்,
அந்த ஆசிரியருக்கு நீங்களே சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும்,அந்த இலக்கிய வகுப்பு பள்ளி நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ்தான் நடைபெற வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
இப்பள்ளி முதல்வரின் இந்த தன்மூப்பான கெடுபிடியால்,செய்வதறியாது பெற்றோர்கள் குழப்பமான நிலையில் இருந்து வருவதாகவும் தெரிகின்றது.பள்ளி முதல்வருடனான பெற்றோர்களின் சந்திப்பு நடந்து ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில்,தற்போது இவ்விவகாரம் தென் செபராங் பிறை மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் பினாங்கு மாநில கல்வி இலாகாவின் கவனத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இனியும் தாமதம் இல்லாமல் மாநிலம் மற்றும் மாவட்ட கல்வி இலக்காக்களின் ஒத்துழைப்புடன்,மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு,கல்வியமைச்சு நல்ல முடிவை அறிவிக்க வேண்டுமென பெற்றோர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கின்றனர்.