
நீரிழிவு மற்றும் ‘சர்க்கரை கலாச்சாரம்‘ தற்போது சமூகத்தில் வழக்கமாகி வருவதைக் கருத்தில் கொண்டு மலேசியர்கள் தங்கள் உணவில் சர்க்கரை அளவைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் மலேசியாவில் உள்ள முக்கிய நோய்களில் ஒன்றாக விளங்குவதோடு ஐந்தில் ஒரு பெரியவர் இந்த நோயால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்தார். மலேசியர்களிடையே நீரிழிவு நோய் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார். நீரிழிவு நோய் நம் உடலைப் பாதிக்கிறது. கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்பு மண்டலத்திலும் கடும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. நாட்டின் முதன்மை ஆட்கொல்லி நோயாக நீரிழவு நோய் விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.



