26.8 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை-கலாச்சார அறவாரிய ஏற்பாட்டில் நாட்டியாமிர்தம்

தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் தமிழர்கள் வாழும் நாடான மலேசியத் திருநாட்டில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 2010-இல் உருவாக்கிய டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை-கலாச்சார அறவாரியம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகம், வரலாறு, ஆன்மிகம் குறித்த பல்வேறு கலைப் படைப்புகளை நாட்டில் உள்ள நாடக மன்றம், நடனப் பள்ளிகளின் மூலம் மலேசிய இந்திய சமுதாயத்திற்காக படைத்து வருகிறது.

அந்த வகையில் இன்று சனிக்கிழமை ஜூலைத் திங்கள் 23-ஆம் நாள் இரவு 7:30 மணி அளவில் பெட்டாலிங் ஜெயா சிவிக் அரங்கத்தில் நாட்டியாமிர்தம் என்னும் பரத நாட்டிய நடன நிகழ்ச்சி நடைபெறகிறது.

நாட்டில் உள்ள சிறந்த நடனப் பயிற்சி மையங்களில் ஒன்றான தஞ்சை கமலா-இந்திரா நடன நடுவம் படைக்கும் இந்த நிகழ்ச்சியில், புராண, இதிகாச காவியங்களில் இருந்து பல்வேறு பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, குறிப்பாக சிவம், வைணவம் உள்ளிட்ட சமய தத்துவங்களில் பொதிந்துள்ள இறைநேசக் கருத்துகளை பக்தி மணம் கமழும் வண்ணம் மக்களுக்கு வழங்குகிறது.

2019-இல் இதே நாட்டிய நடுவம் கூட்டுறவு சங்க கலை-கலாச்சார அறவாரியத்தின் ஆதரவுடன் படைத்த தில்லானா மோகனாம்பாள் என்னும் சமூக நாடகம், நாட்டிய நாடகமாக படைக்கப்பட்டபொழுது, பெரும் வரவேற்பைப் பெற்றது.

அந்த ஆண்டின் இறுதியில் உலக அளவில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் இப்போது சற்று தணிந்துள்ள நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பின் டான்ஸ்ரீ சோமா அறவாரியத்தின் கலைப் பயணம் மீண்டும் தொடர்கிறது.

நாட்டியாமிர்த நிகழ்ச்சின் தொடக்கமாக சிவபெருமானையும் திருமாலையும் வணங்கும் விதமாக ஹரிஹர சுதி இடம்பெறும். இது, வரவேற்பு நடனமாகவும் அமையும்.

ma

தொடர்ந்து இடம்பெறும் வர்ணம் எனப்படும் சிவலீலையில், உலகாளும் பரம்பொருள் சிவபெருமான் காரைக்கால் அம்மையாருக்கு காட்சி தந்த கோலம், மார்கண்டேயன் சாகாவரம் பெற்ற காட்சி, பிட்டுக்கு மண் சுமந்தது, பாண்டிய மன்னனிடம் அடிவாங்கியது, பாண்டிய நாட்டில் குதிரை வாங்க கொடுத்த பணம் இறைப் பணிக்காக மடைமாற்றப்பட்டது, திடீர் வெள்ளப் பெருக்கைக் கண்டு பாண்டிய மன்னன் அதிர்ச்சி கொண்டது, பாற்கடலைக் கடைந்து அமிழ்தம் எடுத்தல், நஞ்சுண்ட நீலகண்ட வரலாறு உள்ளிட்ட சிவநெறிய கருத்தெல்லாம் நாட்டியக் காட்சிகளாக அரங்கேற இருக்கின்றன.

அதைப்போல வைணவ நெறியில் உள்ள கிருஷ்ண லீலை, கோபியர் நடனம், ராதா-கிருஷ்ணன் நடனம், 18 கலைஞர்கள் பங்குபெறும் தில்லானா நடனம், இராமாயணக் காட்சிகள் எல்லாம் இடம்பெற இருக்கின்றன.

பழத்தின் சாற்றை பிழிந்தெடுப்பதைப் போல, பரத நடனத்தின் மூலம் கலை நுட்பத்தை துள்ளியமாக வெளிப்படுத்தி காண்போரின் மனதில் இன்பத்தை சுரக்கச் செய்வதே இந்த நாட்டியாமிர்த படைப்பாகும்.

ஏராளமான இசைக் கலைஞர்களுடன் நேரடி இசையுடன் படைக்கப்படும் இந்த நிகழ்ச்சி, நடனப் பிரியர்களுக்கு குறிப்பாக பரதக் கலை ஆர்வலர்களுக்கும் ஆன்மிகத் தேடல் கொண்டவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும்.

தஞ்சை கமலா-இந்திரா பரத நடுவத்தின் தோற்றுநர் நட்டுவத்திலகம் திருமதி இந்திரா மாணிக்கம், ஏராளமான பரதக் கலைஞர்களைக் கொண்டு பெரும் அக்கறையுடன் பார்த்துப் பார்த்து தயாரித்துள்ள இந்த நாட்டியாமிர்த நிகழ்ச்சிக்கு பாடல்களை இயற்றி, பாடி, இசையமைத்திருப்பவர் தீபன் ராஜ் ராதாகிருஷ்ணன்.

இத்தகைய மாபெரும் கலைப்படைப்பிற்கு அடியும் ஆதாரமுமாக இருக்கும் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை-கலாச்சார அறவாரியத்தால் இலவசமாக படைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து ஆனந்தம் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles