- பிரதமர் தெரிவிப்பு

🔊To listen to this news in Tamil, Please select the text.
அண்மைய காலமாக இன, சமய எதிர்ப்புப் பிரச்சாரங்களும் சதிநாச சட்டவிரோத நடவடிக்கைகளும் நடப்பது கவலை அளிப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பை அணுக்கமாகக் கண்காணிக்க பாதுகாப்புப் படையினர் பணிக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.
ஜானா விபாவா பூமிபுத்ரா பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு சம்பந்தமாகப் பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் மீது 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதோடு, அவரின் முக்கிய சகாக்கள் மீதும் லஞ்ச ஊழல் வழக்குகள் சுமத்தப்பட்டதை அடுத்து, பெர்சத்து தலைவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் மீது பல்வேறு அவதூறுகளைப் பரப்பி களங்கத்தை வாரி இறைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஸ் கட்சி இன சமய விவகாரங்களைக் கிளப்பி அதன் மூலம் மலாய்க்காரர்களின் ஆதரவைத் தன்பக்கம் இழுக்க மும்முரமாக முயன்று வரும் வேளையில், ஐஎஸ் தீவிரவாத இயக்கமான அல் மலாக்கா மீடியா செண்டர் நாட்டில் வேரூன்றி வருவதாகவும் சந்தேகம் வலுத்து வருகிறது.
ஆட்சியை இழந்தவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கத் தகுந்த நேரத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் அமைதியின்மையை கெடுக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என்றும் அதனை உருவாக்குவோர் யாராக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல் தக்க சட்ட நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என அன்வார் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.



