
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஷா ஆலமில் உள்ள யு.ஐ.டி.எம். எனப்படும் மலேசிய மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடலை நடத்த மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான் நேற்றிரவு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் அத்தகைய நிகழ்வினை வேறொரு தேதியில் நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
நோன்புப் பெருநாளுக்குப் பிறகு பொருத்தமான ஒரு தேதியில் இந்த கலந்துரையாடல் நிகழ்வை நடத்த பல்கலைக்கழக மாணவர் பேராளர் மன்றம் ஒப்புக் கொண்டுள்ளதாக மூடா கட்சியின் தலைவருமான அவர் சொன்னார்.
மாணவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியும். ஆனால், அமைதியான முறையில் நடைபெறும் கலந்துரையாடலில் அவர்கள் பங்கேற்க முடியாது என்பதை அறவே ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார்.
யு.ஐ.டி.எம். பணியாளர்கள் ஆக்ககரமான ஆலோசனையை வழங்கினார்கள். வேறொரு இடத்தில் கலந்துரையாடலை நடத்தலாம் என்றும் கலந்துரையாடல் நடுநிலையாக இருக்கு வகையில் நெறியாளர் ஒருவரை நியமிக்கலாம் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர் என்றார் அவர்.
முன்னதாக இந்த கலந்துரையாடலை நடத்தும் நோக்கில் யு.ஐ.டி.எம். வளாகத்திற்கு சுமார் 120 ஆதரவாளர்களுடன் வந்த சைட் சாடிக் பல்கலைக் கழக வளாகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் பல்கலைக்கழக பொறுப்பாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டது.



