
கோவிட் தடுப்பூசியை கையாளும் விதத்தில் மிக மோசமான அடைவு நிலையை கொண்டிருக்கும் பெரிக்காத்தான் அரசாங்கம் அதற்கென ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் பதில் சொல்லியாக வேண்டும் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் கேட்டுக் கொண்டார்.
• தடுப்பூசி போடும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படாததால் ஜுன் 20ஆம் தேதி வரையில் மலேசியாவில் கோவிட் 19இன் தாக்கம் திடுக்கிடும் வகையில் உயர்ந்து 696,408 ஐ எட்டியுள்ளது .
இதில் மரண எண்ணிக்கை 4,408 ம் அடங்கும் .
• தடுப்பூசி வாங்கும் ஒப்பந்தத்தில் காலந்தாழ்த்தி செயல் பட்டதால் , மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி வாங்குவதில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியா மிகவும் பின் தங்கி இருக்கிறது.
ஜுன் 19 ந் தேதி வரை முதல் கட்ட தடுப்பூசி 42 லட்சம் பேருக்கும் இரண்டாவதுக் கட்ட தடுப்பூசி 16 லட்சம் பேருக்கும் போடப்பட்டுள்ளது . இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் 5% ஆகும் .
உலக நாடுகளில் சரசரியாக 9.9% மக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
உள் நாட்டு சுகாதார நிபுணர்கள், தனியார் நிறுவனங்கள் சுயமாக தடுப்பூசி வாங்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் அதற்கு நடப்பு அரசாங்கம் செவி சாய்க்காமல் இருக்கிறது.
மக்களை நாடி சேவை என்ற கொள்கையை இந்த அரசு கடைப்பிடிக்கவில்லை மாறாக , அவர்களின் வயது, பொருளாதார நிலைமை, தடுப்பூசி பற்றிய போதிய விழிப்புணர்வு எதுவும் இல்லாத பட்சத்தில் அவர்களை அரசாங்கம் நிர்ணயித்த இடங்களுக்கு மட்டுமே போய் தடுப்பூசி போட வேண்டுமென்று நிர்பந்தித்திருப்பது மக்களின் மேல் அதன் அக்கறையின்மையை காட்டுகிறது.
• மை செஜாத்ரா என்னும் செயலி ஒழுங்காக செயல் படாத காரணத்தினால் , அதில் தடுப்பூசிக்காக பதிவு செய்ய விழைவோர் விரக்தியடைந்து போகிறார்கள். இந்த செயலி வரி செலுத்துவோரின் பணத்தில் 70 மில்லியனை விழுங்கி இருந்த போதிலும் , அது வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்கவில்லை என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று அவர் கூறினார்.



