
சிலாங்கூர் அகோர வீரமா காளியம்மன் ஆலயம் உடைத்து தரைமட்டமாக்கப்பட்ட விவகாரத்தில் பெட்டாலிங் ஜெயா நில அலுவலக மாவட்ட அதிகாரி முழுமையான விளக்கத்தை வழங்க வேண்டுமென்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குண ராஜ் ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆலயம் அரசாங்க நிலத்திலிருந்தாலும் அதை உடைப்பதற்கான உத்தரவை வழங்குவதற்கு முன்னதாக ஆலய நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு முழுமையான பதில் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். ஆலய உடைப்பு குறித்து முன்னதாகவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தாலும், அந்த நோட்டீஸ் குறித்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் உடன் பேச்சுவார்த்தை நடத்த பட்டிருப்பதாகவும் அந்தப் பேச்சுவார்த்தை குறித்து கடிதம் ஒன்று மாநகர மன்றத்திற்கும், நில அலுவலகத்திற்கும் கொடுக்கப்பட்டதாக ஆலய தரப்பிலிருந்து அதன் தலைவர் கணேசன் கூறியிருக்கிறார். இதையெல்லாம் மீறி இந்த ஆலயம் எப்படி உடைக்கப்பட்டது எதற்காக இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதற்கான முழு அறிக்கையை நில அலுவலகத்தின் மாவட்ட அதிகாரி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஒரு ஆலயம் உடைக்கப்படுகிறது என்றால் அந்த ஆலயத்தில் இருக்கின்ற தெய்வ திரு உருவச்சிலைகள் அகற்றப்படும் நடவடிக்கையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் எப்பொழுதும் ஆலய நிர்வாகம் மற்றும் இந்து சமய பிரதிநிதியான மலேசிய இந்து சங்க தோடு இணைந்து செயல்படுவது வழக்கம். இந்து சங்கத்தின் உதவியோடுதான் ஆலைய உடைப்பு நடவடிக்கைகள் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அகோர வீரமா காளியம்மன் ஆலயம் உடைக்கப்பட்ட விவகாரத்தில் அங்கிருந்த தெய்வச் சிலைகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா.
ஆலயத் தலைவர் கணேசன் வெளியிட்டிருந்த அறிக்கையின்படி பார்த்தால் இந்த ஆலயத்தை உடைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் பூட்ஸ் காலோடு ஆலயத்திற்குள் நுழைந்து இருக்கிறார்கள். ஆலய பிரதிநிதிகள் இல்லாத வேளையில் வெளி கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் காளியம்மன் சிலை விநாயகர் சிலை என எல்லா மூலஸ்தானம் களையும் முற்றிலும் தகர்த்துவிட்டு இருக்கிறார்கள். எனவே அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இந்த ஆலைய உடைப்பு விவகாரத்தில் மலேசிய இந்து சங்கத்தின் தொடர்பு கொண்டார்களா அவர்களின் உதவியை நாடினார்களா என்ற கேள்விக்கும் பதில் தேவைப்படுகிறது என்றார் குணராஜ்.
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு கடுமையான நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் 60க்கும் மேற்பட்ட அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஒன்றுகூடி ஆலயத்தை உடைத்து இருக்கிறார்கள் இது இந்த காலகட்டத்தில் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கையா. இவ்விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்விகளுக்கும் பதில் தேவைப்படுகிறது. இந்த ஆலயத்தை உடைக்க போவது குறித்த தகவல் அவ் ஆலயம் இருக்கும் பகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட தெரியப்படுத்தவில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் விவகாரத்தில் மாவட்ட நில அலுவலகமும் மாநகர மன்றமும் இவ்வளவு அவசரம் காட்டியது ஏன். இந்த அனைத்து கேள்விகளுக்கும் மாவட்ட நில அதிகாரி முழுமையான பதில் அறிக்கையை வழங்க வேண்டும் என்றும் குண ராஜ் கேட்டுக்கொண்டார்
