
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் மின்சுடலை அமைக்கப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தி இருக்கிறார்.
பெட்டாலிங் கம்போங் துங்கு, கிள்ளான் சிம்பாங் லீமா, ஷா ஆலம், பூச்சோங் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே மின் சுடலை உள்ளது.
மற்ற மாவட்டங்களிலும் மீன் சுடலைகள் அமைக்கப்படவேண்டும். இது தொடர்பில் வரும் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீர்மானம் ஒன்றை முன் வைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த இரு நோய் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லீம் அல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களின் உடல்களை உடனடியாக தகனம் செய்ய முடியாத சூழலை மின்சுடலைகள் எதிர்நோக்கி வருவதாக அவர் கூறினார்.
இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால் வரும் சட்டமன்றத்தில் இந்த தீர்மானம் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
மின்சுடலைகள் பற்றாக்குறை காரணமாக நோய்த் தொற்றால் இறந்தோரின் நல்லுடல்களை உடனடியாக தகனம் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது.
சில சமயங்களில் ஐந்து தினங்கள் வரை தகன நடவடிக்கைகாக காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் திறந்த வெளியில் தகனம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
ஆகவே, ஒவ்வொரு நகராண்மைக் கழக பகுதியிலும் குறைந்தது ஒரு மின்சுடலை இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டிய காலம் வந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.



