24.7 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

கொல்லைப்புற ஆட்சி முடிவு கண்டதைப் போல வஞ்சக அரசியலுக்கும் மக்கள் முடிவு காண வேண்டும்!

கால் நூற்றாண்டுக்கும் மேலாக பிரதமர் வேட்பாளராக ஒருவர் மலேசியாவில் மட்டுமல்ல; உலக அளவிலும் காத்திருக்கிறார் என்றால், அவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்தான்.

துடிப்பான துணைப் பிரதமராகவும் உலகம் போற்றிய நிதி அமைச்சராகவும் விளங்கிய அன்வார், அரசியல் சூழ்ச்சிக்கும் வஞ்சகத்திற்கும் ஆளாகி, 10 ஆண்டுகளை சிறைக் கொட்டடியில் கழித்தவர்.

அண்மைய 2018 பொதுத் தேர்தல் நேரத்தில்கூட அன்வாரை நம்பித்தான் நாட்டு மக்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்தனர். இடைக்கால பிரதமராக வந்த துன் மகாதீர் மக்களிடமும் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களிடமும் உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாமல் அன்வார் பிரதமராக வரமுடியாமல் செய்யவேண்டிய அத்தனை சூழ்ச்சியையும் செய்தார்.

தனக்கான நெருக்கடி முற்றி விலக வேண்டிய நேரத்தில் தான் சார்ந்த பெர்சத்து கட்சியை நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு தானும் வெளியேறினார். அதன்வழி ஒரே கல்லில் இரண்டு காய்களை அடித்தார் மகாதீர்.

அன்வாருக்கான பெரும்பான்மையைக் குறைத்ததுடன், அவரின் கட்சியையும் உடைத்தார். தவிர, 14-ஆவது பொதுத் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் ‘ஷெரட்டன் நகர்வு’ என்ற பெயரில் இரகசியக் கூட்டங்களை நடத்தி புதிய ஆட்சியை அமைக்கவும் வழி அமைத்துக் கொடுத்துவிட்டு தந்திரமாக நகர்ந்து கொண்டார் மகாதீர்.

இப்படி கொல்லைப்புறமாக அரியணை அமர்ந்த டான்ஸ்ரீ மகியாடின் யாசின், 8-ஆவது பிரதமர் என்ற அளவில் நாட்டை வழிநடத்துவதில் முனைப்பு காட்டுவதைவிட, தன்னுடைய கட்சியை குறுக்கு வழியில் வலுப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். அந்த வகையில், சபா மாநிலத்தில் அமைதியாக நடந்து கொண்டிருந்த வாரிசான் தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, வாரிசான் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்து கட்சிக்குத் தாவும் படலம் ஆரம்பமானது.

இத்தனைக்கு அப்போது சபா மாநில முதல்வராக இருந்தவர் மகியாடினின் பழைய கூட்டாளி டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டால்தான். இந்த நிலையில் கொதித்தெழுந்த அப்டால், சட்டமன்றத்தை கலைத்தார்.

இதனால் அங்கு பொதுத் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாய சூழல் எழுந்தது. தீபகற்ப மலேசியாவில் கொவிட்-19 ஆட்கொல்லி கிருமி இன்று இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுப்பதற்கு சபா மாநிலத் தேர்தல்தான் அடைப்படைக் காரணம்.

முதன் முதலில் இந்தக் கிருமி 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மலேசியாவில் கால்பதிக்க ஆரம்பித்த நேரத்தில் அதற்கான தடுப்பு நடவடிக்கையில் கோட்டை விட்டவர் மகாதீர். அவர், அன்வாருக்கான குழியை எவ்வளவு ஆழத்தில் தோண்டுவது என்பதில்தான் குறியாக இருந்தார்.

தற்பொழுது, தனக்கு தோள்கொடுத்த நண்பர்களாலேயே காலை வாரி விடப்பட்டிருக்கிறார் மகியாடின். இவரும் அதற்கு ஏற்பதான் நடந்து கொண்டார். பெர்சத்து கட்சியின் அடாவடித்தனத்தால்தான் பேராக் மாநில மந்திரி பெசார் பதவியையும் அந்தக் கட்சி இழக்க நேர்ந்தது. இப்பொழுது பிரதமர் பொறுப்பையும் இழந்து நிற்கிறது. இந்தக் கட்சியின் வரலாற்றில் இன்றைய நாள் மறக்க முடியாத நாள்.

பெர்சத்துக் கட்சி, இன்றைய காலைப் பொழுதை மிகவும் பரபரப்புடன் தொடங்கிய வேளையில் மாலைப் பொழுதில் ஆடி அடங்கும் நிலைக்கு ஆளானது.

இன்று காலையில், புத்ராஜெயாவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய பிரதமர், தான் பதவி விலகப் போகும் கடிதத்தை அரண்மனையிடம் சமர்ப்பிக்கப் போவதாக அறிவித்துவிட்டு, அந்த மட்டில் கூட்டத்தையும் நிறைவு செய்தார். அமைச்சரவை உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருந்த வேளையில், மகியாடின் அரண்மனைக்கு விரைந்தார்.

அதற்குள், மாட்சிமைக்குரிய மாமன்னர், தேசிய போலீஸ் படைத் தலைவர், அட்டர்னி ஜெனரல், தேர்தல் ஆணையத் தலைவர் ஆகியோரை சந்தித்து முடித்திருந்தார். தொடர்ந்து, மகியாடினின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட மாமன்னர், அடுத்த ஏற்பாடுவரை இடைக்கால பிரதமராகத் தொடரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நாடு தற்பொழுது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருப்பதால், இந்த நாடாளுமன்றத்தின் மிச்ச காலத்தை மக்கள் விரும்பியபடி நம்பிக்கைக் கூட்டணி வழிநடத்துவதுதான் ஜனநாயக அடிப்படையிலும் தார்மீக ரிதியிலும் சரியானது.

ஆனால், மாமன்னரின் முடிவைப் பொறுத்துதான் நாடு அடுத்தக் கட்டத்திற்கு நகரும்.

மிகுந்த பரபரப்புக்கு ஆளாகி இருக்கும் தேசிய அரசியல், இப்பொழுது அரண்மனையை மையம் கொண்டுள்ளது.

நாட்டின் ஒன்பதாவது பிரதமராக அன்வார் அரியணையில் அமர வாய்ப்பு கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles