
இந்தியர்கள் மிக அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்குத் தமிழ்ப்பள்ளிகளை இடம் மாற்றுவதாக ஆட்சியாளர்கள் வாக்குறுதியளித்து பல ஆண்டு காலமாகி விட்டது. இது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பதிவில் இறக்கம் காணப்படுவதற்கு காரணமாய் உள்ளது என்று கல்வியாளரும் ஆய்வாளருமான குமரவேலு ராமசாமி தெரிவித்தார். புறநகர் பகுதிகளிலுள்ளத் தமிழ்ப்பள்ளிகள் நகர்புறங்களுக்கு மாற்றப்பட்டு பள்ளித் தலைமைத்துவம், ஆசிரியர்களின் திறன்கள், பெற்றோர்கள், சமூகத்தினரின் ஈடுபாடும் மேம்படுத்தப்பட வேண்டும். இந்திய மாணவர்கள் அதிகம் வசிக்கக்கூடியப் பகுதிகளுக்குத் தமிழ்ப்பள்ளிகளை இடம் மாற்றுவதன் மூலம் மாணவர்களின் பதிவை அதிகரிக்கத் தமிழ்ப்பள்ளி நிர்வாகங்கள் வகை செய்யும். புறநகர் பகுதிகள், தனியார் நிலங்கள் தோட்ட நிலங்களில் 170 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. தோட்டப்புறப் பள்ளிகளில் 30க்கும் குறைவான மாணவர்களே கல்விப் பயில்கின்றனர் என்று அவர் சொன்னார்